Wednesday, June 21, 2017

நடைமுறை வாழ்க்கை

ஒரு கிராமம். 
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். 

அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. 

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. 

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .

 ”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,

 “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை. 

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன. 

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன. 

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. 

‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், 

’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.

காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.

 உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை. 

முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது. 

சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது. 

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல். 

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர். 

சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது. 

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான். 

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும்  அவனை குழப்பிவிடுகிறது. 

இதுதான் உலகமா? 
இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.

முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!. 

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

      "வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை"....

Friday, April 7, 2017

ஆச்சரியம் - 7அன்றாட வாழ்வில் ஏழு வித ஆச்சரியத்தின் மத்தியில் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் இதற்கு காரணம் ஆசையே
அவையாவன


ஆச்சரியம்
ஆச்சரியம்


மரணம்
மரணம்  என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், 
கவலைப்படாமல்,தன் கடமைகளச்செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம்...

 உலகம் அழிவு
ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும்  என்பதை அறிந்த மனிதன், உலகத்தின்மீது ,மோகம்  கொண்டிருப்பது ஆச்சரியம்

இறைவன்
எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும்  என்பதை அறிந்த மனிதன், 
கைநழுவிச் சென்றவற்றை  எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்.

வாழ்க்கைக்கான தீர்வு
மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை  நம்புகின்ற மனிதன்,அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...

நரக வேதனை
நரக நெருப்பின் வேதனை பற்றி அறிந்த மனிதன்,அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பாவம், தவறு செய்வது ஆச்சரியம்.

வணக்கம்
இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை
நிறை வேற்றுவது ஆச்சரியம்.

சொர்க்கம்
சுவர்க்கத்தைப் பற்றி அறிந்த மனிதன், உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்.

Wednesday, March 22, 2017

மாணவன் எப்படி இருக்க வேண்டும் - சோக்ரடீஸ்

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சோக்ரடீஸ் சொன்னார்!

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ”ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.அதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க
வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றான்.
”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.
”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான் மாணவன்.”கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.
”அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…”
”ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.
”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

Wednesday, March 15, 2017

நன்றி - தத்துவம்

நன்றி

நன்றி மறப்பது நன்றன்று , ஆனால் தற்போதைய வாழ்க்கை நடைமுறையில் நன்றி சொல்லும் பழக்கம் சற்று குறைந்து கொண்டு செல்வதாக அவதானிக்க முடிகிறது. 

நன்றியைப் பற்றி இறைப்புலவர் திருவள்ளுவர் மிக நன்றாக சொல்லியுள்ளார். அதைவிட அன்றாடம் எம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நாம் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம்

கீழே சில நன்றிகளின் வகைகள் ...


 1.  மனதார நன்றி சொல்லவேண்டியவைகள்

 •  எனது அஹம்பாவங்களை தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத் தந்த என் கஷ்டங்களுக்கு
 • என்னை அவமரியாதை செய்து எனக்கு வைராக்கியம் வரக்காரணமான என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
 • எனக்கு வலியைத் தந்து அடுத்தவரின் வலியை எனக்குப் புரியவைத்த புரியாத நோய்களுக்கு 
 • எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த, என் பலவீனத்திற்கும், உடலுக்கும்.
 • என் பலத்தை நான் உணர்ந்து என் வாழ்வை நானே நடத்தக் காரணமான என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
 • என் உடல் உறுப்புகளின் மதிப்பை எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த உடல் ஊனமுற்றோருக்கு
 • என் பெற்றோரின் பெருமையை,என் புத்தியில் அழுத்தமாய் பதித்த அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு.
 • ஒரு சிரிப்பினால் உலகையே வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச் சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு.
 • பணத்தினால் மட்டுமே வாழ்வில் எல்லா சுகமும் கிடைத்துவிடாது என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத பணக்காரர்களுக்கு.
 • இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும்..  எனக்கு என்னை ஆத்மா என்று உணர வைக்க என்னை குருவிடத்தில் சேர்ப்பித்த என்னுடைய வாழ்க்கைக்கு என்றென்றும் மனதார நன்றி . . . . !!!

Wednesday, February 22, 2017

சொர்க்கம் , நரகம் எது இலவசம்?

சொர்க்கம் , நரகம்
சொர்க்கம் , நரகம்
சிறு கதை ஒன்றினால் விளக்கம் தரப்பட்டுள்ளது

ஓர் முதியவர் தனது பேரனிடம்.:

பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும். 

பேரன்: அது எப்படி தாத்தா?

முதியவர்:

 • மது அருந்த பணம் வேண்டும்
 • சிகரெட் புகைக்க பணம் வேண்டும்
 • கூடாத இசை கேட்க பணம் வேண்டும்
 • பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்
 • சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்,

ஆனால் மகனே!
சொர்க்கம் செல்வது இலவசம்
 • இறைவனை ஆராதிக்க பணம் தேவையில்லை
 • விரதமிருக்க பணம் தேவையில்லை
 • பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை
 • பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை
மகனே!

நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

இலவசமான சுவர்க்கத்தை நேசிக்கிறாயா?

முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

Sunday, February 19, 2017

அர்ச்சனைப் பூக்கள்- தத்துவம்

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள்

 • அல்லிப்பூ - செல்வம்  பெருகும்
 • பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்
 • வாடமல்லி - மரணபயம் நீங்கும்
 • மல்லிகை - குடும்ப அமைதி
 • செம்பருத்தி - ஆன்ம பலம்
 • காசாம்பூ - நன்மைகள்
 • அரளிப்பூ - கடன்கள் நீங்கும்
 • அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை
 • செம்பருத்தி - ஆன்ம பலம்
 • ஆவாரம் பூ - நினைவாற்றல்  பெருகும்
 • கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை
 • ரோஜா பூ - நினைத்தது  நடக்கும்
 • மருக்கொழுந்து -  குலதெய்வம் அருள்
 • சம்பங்கி - இடமாற்றம்  கிடைக்கும்
 • செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு
 • நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்
 • சங்குப்பூ (வெள்ளை) - சிவப்பூஜைக்கு  சிறந்தது
 • சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு  சிறந்தது
 • மனோரஞ்சிதம் - குடும்ப  ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்
 • தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்  
 • நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
 • முல்லை பூ - தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள் உண்டாகும்
 • பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்
 • தங்க அரளி (மஞ்சள் பூ) -  குருவின் அருள், பெண்களுக்கு  மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும், கிரக பீடை நீங்கும்
 • பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.

பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள்,  தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.

அரச்சனை செய்த பூக்கள்  கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.

கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில்  முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால்  தீமைகள்  உண்டாகும்  நன்மைகள் கிடைக்காது.


பூசைக்கு சிறப்பான பூக்கள்

1. திருமாலுக்கு --  பவளமல்லி, மரிக்கொழுந்து துளசி.
2. சிவன்  --  வில்வம், செவ்வரளி 
3. முருகன் -- முல்லை, செவ்வந்தி, ரோஜா 
4. அம்பாளுக்கு -- வெள்ளை நிறப்பூக்கள்..

 

ஆகாதபூக்கள்

1. விநாயகருக்கு -- துளசி    
2. சிவனுக்கு -- தாழம்பூ  
3. அம்பாளுக்கு  -- அருகம்புல்
4. பெருமாளிற்கு -- அருகம்புல்
5. பைரவர்   -- நந்தியாவட்டை
6. சூரியனுக்கு   -- வில்வம்  

Sunday, February 5, 2017

தீட்சை

தீட்சை
தீட்சை

தீட்சை என்றால் என்ன ? 

`தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல்.

மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை.

மனிதன் இறைநிலையை அடைவதற்கு
 1.  மந்திரக்கலை, 
 2. தந்திரக்கலை,
 3.  உபதேசக்கலை 
ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன.

மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.

நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை  உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர்.

முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள்  தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர்.

இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு  உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.

தீட்சைகள் ஆறு வகைப்படும்.  அவையாவன :

 1. பரிச தீட்சை,    
 2. நயன தீட்சை,     
 3. பாவனா தீட்சை,     
 4. வாக்கு தீட்சை,     
 5. யோக தீட்சை, 
 6. நூல் தீட்சை*

பரிச தீட்சை :

 ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.

நயன தீட்சை :

 ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.

பாவானா தீட்சை :

 ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை.

யோக தீட்சை :

  ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.

வாக்கு தீட்சை :

 ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.

நூல் தீட்சை :

சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.

உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க.

எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது.

Tuesday, January 24, 2017

வாழ்க்கையும் கணக்கும்

சில வித்தியாசமான கணக்குகள் வாழ்க்கையிலும் எப்படியும் இடம் பெறத்தான் செய்கின்றன. இதில் சிலர் கணக்குகள் போடாமலே வெண்று விடுகின்றனர் ஆனால் மறைமுகமாக அங்கே கணிதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பது தெரியாத பகுதியாகும்.

கூட்டல்:

மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்

கழித்தல்:

மனிதன் - தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் - கவலை = உற்சாகம்
மனிதன் - ஆனந்தம் = சோம்பல்
மனிதன் - இயலாமை = முயற்சி
மனிதன் - அன்பு = குரோதம்
மனிதன் - ஆசை = அமைதி

பெருக்கல்:

மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்


வாழ்க்கையும் கணக்கும்

Wednesday, January 4, 2017

கவரும் வாசகங்கள்

 சில வாசகங்களை அன்றாடம் வாசிக்கவே , கேட்கவோ முடிகிறது .ஆனால் அவ் வாசகங்களில் சொல்லப்பட்ட வைகளை நாம் ஒரு போதும் பின்பற்றுவது இல்லை ஏன் எனில் சில நேரங்களில் மறந்து விடுதல் , தேவை அற்றவை என ஒதுக்கிவிடுதல் அல்லது அதை பிரயோகிக்க தயக்கம், பிரயோகிக்க தக்க தருணம் வரை காத்திருத்தல் ஆகும்.

கீழே தரப்பட்ட சில முக்கிய வாசகங்கள்...............................


வாழ்க்கை
வாழ்க்கை✳பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.
✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
✳நடப்பதைப் பாருங்கள்.நடந்ததைக் கிளறாதீர்கள்.
✳உறுதி காட்டுங்கள்.பிடிவாதம் காட்டாதீர்கள்.
✳விவரங்கள் சொல்லுங்கள்.வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
✳தீர்வை விரும்புங்கள்.தர்க்கம் விரும்பாதீர்கள்.
✳விவாதம் செய்யுங்கள்.விவகாரம் செய்யாதீர்கள்.
✳விளக்கம் பெறுங்கள்.விரோதம் பெறாதீர்கள்
✳சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.
✳செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்.
✳எதிர் தரப்பும் பேசட்டும்.என்னவென்று கேளுங்கள்.எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
✳நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.
✳தானாய்த்தான் முடியுமென்றால்,வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....* 

# வாழ்க்கை குறுகியது, ஆனா  அழகானது 

Monday, January 2, 2017

காத்திருக்கப் பழகு - தத்துவம்

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 

'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'. காத்திரு


நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும் அவையாவன

 • பசிக்கும் வரை காத்திரு 
 • உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
 • காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு 
 • சளி வெளியேறும் வரை காத்திரு 
 • உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு 
 • பயிர் விளையும் வரை காத்திரு 
 • உலையில் அரிசி வேகும் வரை காத்திரு 
 • கனி கனியும் வரை காத்திரு
 • எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.
 • செடி மரமாகும் வரை காத்திரு 
 • செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு 
 • தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு 
 • தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு 
 • துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு 
 • தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு 
 • உணவு தயாராகும் வரை காத்திரு 
 • போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு
 • நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த  கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு
 • பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை ஒட்டப்பந்தையம் அல்ல

 • ஒடாதே
 • நில்
 • விழி
 • பார்
 • ரசி
 • சுவை
 • உணர்
 • பேசு
 • பழகு
 • விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,

 1. உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
 2. உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.
 3. எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.  
 4. உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா?

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.


காத்திருக்கப் பழகினால்

 1. வாழப் பழகுவாய்.
 2. இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.
 3. எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்.
வேறு ஏதேனும் தெரியுமாயின்   .........................